என் அரசர்
கறை படிந்த பாவி நான் – என்
குறைகளை
முறையிடவே
தேடியே
அலைந்தேன் ஓர் அரசனை
வாடியது
என் உள்ளம் குறை தீர்க்கும்
அரசனை
காணாமல்!
தேடியே வந்தார் ஓர் அரசன்
ஓடினேன் அவர் அருகே – அவர் தந்த
மறை நூல் கற்றேன், அவ் வழி நின்றேன்
என் கறை நீக்கி எனை அரவணைத்து
குறைகளை நிறைவாக்கினார்
யார் அந்த அரசர்?
மாளிகையில் மாவேந்தனாய் அல்ல
மாடடையில் மானிடர்க்காய்
பொற்றாடை உடுத்தி அல்ல
வெற்றுடலில் கந்தை பொதிந்தவராய்
ஏழை கோலமெடுத்தவரே
என் அரசர் - இறை
மகன் இயேசு
பட்டுடுத்தி பல்லக்கில் பவனி வரவில்லை
கட்டுண்டு சிலுவையில் சிரம் சாய்த்தவராய்
கொட்டும் முரசுகள் ஒலிக்கவில்லை
சொட்டும் வேர்வையுடன் வேதனை சகித்தவராய்
பாரச் சிலுவை சுமந்தவரே
என் அரசர் - இறை மகன் இயேசு
பரிசுகள் எனக்களிக்கவில்லை
தன்னுயிர் நீத்தார் எனக்காய்
பரிசுத்தம் அடைந்தேன் – அவர்
சிலுவையில் சிந்திய இரத்தத்தால்
நித்தம் அவர் புகழ் பாடுவேன்
என் அரசர் இயேசுவே என்று
பால்ராஜ் சாமுவேல்
No comments:
Post a Comment