Wednesday, 25 November 2015

கானகத்தில் ஓர் காரிகை!

கானகத்தில் ஓர் காரிகை!  


கானகத்து ஓரத்தினிலே
தன் அகத் துயரினிலே
மூழ்கியவளாய் எண்ணினாள்
ஆழ் கடலில் தன்னுயிர் நீக்க!

இலை விரித்தாடும் மரங்களை போல
தலை விரித்தாடும் மங்கையவள்!
பல குரல் விலங்கினம் எழுப்பின
அவ குரல் அவள் மனம் எழுப்பியது!

கனல் பொங்கும் கண்தனை
கண்ணீரினால் அனைக்கும் நிலை!
அலையென எழும்பும் மனதினை
அமைதியில் ஆழ்த்தும் நிலை!

உடலினை மரம் தாங்கியிருக்க
உயிரினை மனம் தாங்காமல்
பிரிவினை விரும்பி காரிகை
கானகத்தில் காத்திருந்தாள்!

வழி வந்த குளிர் காற்று
வலு விழந்த தளிர் மேனியை
துன்ப மிகுந்த வேளைதனில்
இன்ப உறவு கொண்டாடி சென்றது!

அகத்தினில் இருள் சூழ்ந்திருக்க
மேகமதில் மறைந்திருந்த
நிலவுப் பெண் தன் ஒளி கொண்டு
தோழியாய் தொட்டுறவாடினாள்!

குளிர் கொண்ட அவள் மேனி
தோழியின் உறவினை கண்டு
ஆழி போல் பொங்கியே
ஓடி மறைந்தாள் மரங்களினிடையே!

        -பால்ராஜ் சாமுவேல்-


Saturday, 14 November 2015

Children at home


சின்னஞ்சிறிய சிரார்கள்
     இல்லத்தில்
இயற்கை ஈந்த சோலை
உலாவரும் தென்றல் காற்று  
மனம் மயக்கும் மழலை இசை
புன்னகை பூக்களின் பாசத்தின் வாசம்
கல கலக்கும் மாணவர் மன்றம்
நவ நாகரீகத்தின் கண் காட்சி
மன மகிழ்ச்சியின்  ஊற்றுக்கண்!

                   பால்ராஜ் சாமுவேல்

Monday, 9 November 2015

Tower of Babel


எண்ணில்லாத பாவங்கள்

எண்ணில்லாத பாவங்கள் எனை
கண்ணிருந்தும் குருடனாக்கிற்றே
     பாரும் தேவனே – பாவம்
     தீரும் ராஜனே
வாயிருந்தும் வாழ்த்தாது உமை
அருவருத்து அவமாக்கினேனே
     கேளும் தேவனே – எனை
     மீளும் ராஜனே
ஜீவ ஒளியாய் ஜீவனுள்ள தேவனிருந்தும்
பாவ வழி தேடி பறந்தேனே
     சேரும் தேவனே – எனை
     உம் பாதம் சேரும் ராஜனே

               பால்ராஜ் சாமுவேல்

Tuesday, 3 November 2015

My Church

சகல பரிசுத்தவான்கள் ஆலயம்
  
இறை பக்தி நிறையூட்டி எமை இயக்கி
மறை பொருள் மனதினில் வித்திட்ட ஆலயம்
கறை படிந்த என் உள்ளமதை இறை யேசுவின்
உறைவிடமாக்க உதவிய ஆலயம்.

சஞ்சலத்தில் சஞ்சரித்திடும் நேரமதில்
தஞ்சமென சரணடைந்தேன் இவ்வாலயம்
அஞ்சாதே எனும் ஆண்டவர் குரல் கேட்டு
நெஞ்சத்தின் கலி நீங்கியது இவ்வாலயத்தில்

உம் பாதம் பணிகின்றேன் பராபரனே
சகல பரிசுத்தவான்கள் ஆலயம் எனக்கீந்ததால்
நிதம் கட்டுவோம் உம்  திருச்சபைதனை
இத்தரைதனில் உம் நாமம் சிறந்திலங்கிடவே


                        பால்ராஜ் சாமுவேல்